நாங்கள் யாருக்கு சொந்தம்?
உலகம் எவ்வளவு தான் பல துறைகளிலும் அபிவிருத்தியடைந்திருந்தாலும் அடிப்படை வசதிகளான வீடு, நீர், மலசலகூடம் மற்றும் மின்சாரவசதி கூட கிடைக்கப்பெறாத நிலையில் மக்கள் இன்னமும் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றார்கள். அதிலும் இலங்கை போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் அடிப்படை வசதிகளற்று வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்லாம். மக்கள் அந்த அடிப்படை வசதிகளை அரச தரப்பினரிடமிருந்து பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுமுள்ளனர். அவ்வாறு போராடி பெறப்படும் அடிப்படை வசதிகளிலும் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆனாலும் பல சந்தர்ப்பங்களில்; மக்களின் கோரிக்கைகள் கோரிக்கைகளாகவும் வெறும் காகிதங்களாகவுமே இருந்து விடுகின்றன.
இதேபோன்று அடிப்படை வசதிகளற்று அவதியுறும் அறபா நகர், கொக்குலான்கல் பிரதேச மக்கள் பற்றிய செய்தியினை பத்திரிகையொன்று அண்மையில் வெளியிட்டிருந்தது. அறபா நகர், கொக்குளான் கல் பிரதேச மக்கள் குடிநீர், மலசலகூடம், வீதி அபிவிருத்தி, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர் என அந்த செய்தி அமைந்திருந்தது. அம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏன் வழங்கப்படவில்லை என நாம் தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாக இறக்காமம் பிரதேச செயலகத்திடமும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திடமும் வினவினோம். அதற்கு இரண்டு பிரதேச செயலகமும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பதில்களை வழங்கியிருந்தன.
இறக்காமம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகங்களிடம் இவ் அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுக்க பிரதேச செயலகத்தினால் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என வினவப்பட்டது. அதற்கு இறக்காமம் பிரதேச செயலகம் மின்சாரம் மற்றும் மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தது. ஆனால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் பிரதேச மக்களிற்கு மின்சாரவசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என தெரிவித்தது.
நாம் மேலும் அப் பிரதேச மக்களிற்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லையாயின் அதற்கான காரணத்தினையும் குறிப்பிடும்படியும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பின் அத் திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகையினையும் குறிப்படும் படியும் கோரியிருந்தோம். அதற்கு இரண்டு பிரதேச செயலகங்களும் எதுவித பதிலையும் வழங்கவில்லை.
இறக்காமம் பிரதேச செயலகம் இந்த அறபா நகர், கொக்குளான்கல் குறித்து முக்கிய தகவலொன்றினை தெரிவித்திருந்தது. அதாவது அட்டாளைச்சேனை, இறக்காமம் பிரதேச செயலகங்களுக்கிடையே தீர்வு காணப்படாத எல்லைப்பிரச்சனை காணப்படுகின்றது. இதனை தீர்த்து வைப்பதற்கு அரசாங்க அதிபர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு நில அளவைத் திணைக்களத்தால் எல்லை காண்பிக்கச் சென்ற போது தீகவாபி மக்களால் அவை தடுத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தால் அக்கரைப்பற்றை சேர்ந்த ஒருவருக்கு அளிப்பு வழங்கப்பட்டு, அக்காணிக்குள் குறிப்பிட்ட நபரால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரின் அனுமதியின்றி குறிப்பிட்ட சில குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. அவர்களை இறக்காமம் பிரதேச செயலகத்துடன் சேர்த்துக் கொண்ட பின்னரே அதற்கான அடிப்படை வசதியினை செய்து கொடுக்க முடியும் என இறக்காமம் பிரதேச செயலகம் மேலும் தெரிவித்தது. ஆனால் அட்டாளைச்சேனை வழங்கிய தகவலில் இது பற்றிய தகவலகள் எதனையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பிரதேச மக்கள் எந்த பிரதேச செயலகத்திற்கு உரித்துடையவர்கள் என்று இரண்டு பிரதேச செயலகங்களாலும் உறுதியாக கூறமுடியாத போது அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்கப்போவது யார்?
Attachment 1